Tuesday, November 23, 2010

இலவச எரிவாயு அடுப்பு


இலவச எரிவாயு அடுப்பு


இலவசம்... ஏதோ இந்த பேரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கு இப்போது அது என்னமோ கெட்ட வார்த்தையாகத் தெரிகிறது. என்ன செய்வது அவர்களின் எண்ணத்திரையில் தெரிவது அது...


அவர்கள் யார் என்று பார்த்தால் ஏதோ கொஞ்சம் படித்து ஒரு நல்ல அல்லது சுமாரான வேலையில் அமர்ந்து ரேஷன் கடையை நேரில் சென்றுகூடப் பார்க்காதவர்களாக அல்லது அதற்கு நேரம் கிடைக்காதவர்களாகத் தான் இருப்பார்கள் என்பது என் கருத்து.

இன்னும் ரேசன் கடையில் அரிசி முதல் சமையல் சாமான்களைப் பெற்று குறைந்த வருவாயில் குடும்பம் நடத்தும் எத்தனையோ ஆயிரம் இல்லை இலட்சக்கணக்கான குடும்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மறுக்கவியலாத உண்மை இது. அவர்களுக்கு இது ஆறுதல்.

ஏனெனில் இன்றும் கூட விறகில் அடுப்பை எரித்துக்கொண்டு அல்லது மண் எண்ணெயில் அல்லல் படும் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர்களும் இந்த கஷ்டத்திலிருந்து மீள வழிகிடைக்காதா என்று புலம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர்கள் என்றும் உழைப்பதை மறந்த சோம்பேறிகள் இல்லை. தான் அதிகம் உழைப்பதாக விளம்பரம் செய்கின்ற பெரிய நிறுவன ஊழியர்களோ அரசியல்வாதிகளோ இல்லை.

தினந்தோறும் உழைத்து வாழும் அன்றாட வாசிகள் தான். அவர்களுக்கும் தாங்கள் எத்தனை நாள் சமையலுக்காக விறகைத் தேடி அலைவது என்ற சலிப்புடன் இருக்கும் மக்கள் இன்றளவும் இருக்கின்றனர். இன்றும் இலவச சிலிண்டர் இணைப்பைப் பெறக் காத்திருக்கும் எத்தனையோ ஒன்றியங்கள் கிராமங்கள் உள்ளன.

அத்திட்டமும் ஒரே நாளில் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை. பல்வேறு கட்டங்களாக மாவட்ட வாரியாக, ஒன்றியம் வாரியாக கிராமம் வாரியாக இந்த நான்கரை ஆண்டுகளாக கொடுத்து வருகிறார்கள். இன்னமும் பல கிராமங்களுக்கு இன்னும் இத்திட்டம் சென்றடையாமலும் உள்ளது. இலவசங்களைப் பெற்றவர்கள் இப்போதும் உழைக்காமல் எப்போதும் அந்த டிவியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

நமக்கும் சிலிண்டர் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கிராமங்கள் தமிழ்நாட்டில் எத்தனை. அவர்களுக்கு வலைப்பதிவைத் தெரியாது தங்களை சோம்பேறிகள் என்று கூறும் பதிவர்களையும் அறிவார்ந்த நண்பர்களையும் பற்றி தெரியாது. அவர்களுக்கு தெரிவது எல்லாம் தங்கள் கஷ்டத்தில் ஒன்று குறைவது.

அதற்காக அவர்கள் தினமும் உழைக்காமல் படுத்துறங்கிக் கொண்டிருக்கும் சோம்பேறிகள் இல்லை.

இலவசம் தினந்தோறும் கொடுக்கப்படுவதில்லை. என்றோ ஒரு நாள் கிடைத்த கிடைக்கின்ற இலவசத்திற்காக தன் ஆயுள் முழுவதும் உழைக்க மறுக்கும் மனம் படைத்தவர்களுக்காக வழங்கப்படுவதும் இல்லை. அப்படி யாரும் எல்லாரும் எதிர்பார்ப்பதும் இல்லை.

ஒரு நாள் டிவியையோ அல்லது இலவச சிலிண்டரையோ வாங்கிவிட்டு அத்துடன் எந்தவித வேலைக்கும் செல்லாதவர்களாக சோம்பேறிகளாக இருந்தால் அவர்களின் அடுத்த வேலை உணவு எங்கிருந்து வரும்.

உதாரணமாக ஒருவர் டிவியை இலவசமாக வாங்கி அதையே ஒரு 1000 ரூபாய்க்கு விற்றால் அதை வைத்து எத்தனை நாள் வாழமுடியும். அதன் பின் அடுத்த தேர்தல் வரையில் அவர் உழைக்கவே இல்லை என்றால் அவரின் நிலை என்ன?

இன்னும் பல எளிமையான விளக்கங்களை நான் நேரடியாக அறிந்தவற்றை என்னால் கூற இயலும். மேலும் ஒரு மக்கள் திட்டம் என்றால் பல பார்வைகளும் பல புரிதல்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதன் பெரும்பான்மை யாரைச் சென்றடைகின்றது என்பதைப் பொறுத்தே அதன் பலன் வலுப்பெறுகின்றது. மேலும் சோம்பேறிகளானவர்கள் தங்கள் சோம்பேறித்தனத்திற்கான சாக்குகளுக்காக இதைப் பயன்படுத்தலாம் தவிர இவையனைத்தும் முடியாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவவே. அவர்களை சோம்பேறியாக்குவதற்கு அல்ல. வீண் விமர்சனங்களைத் தவிர்ப்போம், நல்லவற்றை ஏற்போம்.



No comments:

Post a Comment