Thursday, July 22, 2010

நாடோடிப் பயணம்

கடந்துவந்த பாதை


நாடோடி.....

நான் எனது வாழ்க்கையைத் தேடி கிட்டத்தட்ட ஒரு நாடோடியாகவே இன்றுவரையில் வாழ்ந்துள்ளேன். அது பற்றி சில வரிகள்...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குளிப்பட்டி கிராமத்தில் பிறந்த நான். எட்டாம் வகுப்புவரையில் அங்கேயே படித்தும் வந்தேன். எட்டாம் வகுப்பு பயிலும்போது எனது தந்தையை அவரது இரத்த அழுத்த நோயின் காரணத்தால் இழந்தேன். அதே சமயம் எனது மூத்த அண்ணன் காவல்துறையில் பணியாற்றி வந்ததால் தந்தையின் இழப்பிலும் எனது குடும்பம் பெரிய பொருளாதாரப் பாதிப்பைப் பெறவில்லை. பின்னர் அருகில் உள்ள கிராமமான முத்துநாயக்கன் பட்டியில் எனது உயர்நிலைக்கல்வியைத் தொடர்ந்தேன்.

பத்தாம் வகுப்பு முடித்த பொழுது எனது இரண்டாம் சகோதரனின் இரத்தப் புற்றுநோயின் காரணமாக அவனையும் எங்கள் குடும்பம் இழந்தது. பின்னர் எனது அண்ணனுக்கு திண்டுக்கல் ஆயுதப்படைப் பிரிவிற்கு மாற்றல் கிடைத்ததால், எங்கள் குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம்பெயர்ந்தது.

நான் எனது மேனிலைக் கல்வியை திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் கற்றேன். பின்னர் பட்டப்படிப்பு பயில பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்த நான், தினமும் திண்டுக்கல்லில் இலிருந்து பழனிக்கு புகைவண்டியில் சென்று வந்தேன்.


கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு எனது பள்ளித் தோழர்களுடன் திண்டுக்கல்லில் கணினி பழுதுபார்க்கும் குழுவைத் தொடங்கி, அங்கு பயிற்சி பெற்றேன். பின்னர் கரூரில் எனது அண்ணியின் தங்கை உமாவின் (இவர்தான் எனது மனைவி) பரிந்துரையின் பேரில் ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் உற்பத்தி ஒருங்கிணைப்பாளர் பணியில் சேர்ந்தேன். இடையில் அண்ணனுக்கு உள்ளூர் காவல்நிலையத்திற்கு மாற்றலானதால் எனது குடும்பம் ஒட்டன்சத்திரம் நகருக்கு இடம் பெயர்ந்தது. அப்போது நான் கரூரில் ஒரு விடுதியிலும், பின்னர் எனது சகோதரி (உறவினர்) ஒருவரின் வீட்டிலும் தங்கியிருந்தேன். ஆனால் வாரந்தோறும் விடுமுறை நாட்களில் ஒட்டன்சத்திரம் செல்வது எனது வழக்கம்.


பின்னர் எனது நண்பர் மூலமாக பெங்களூரில் உள்ள ஒரு செயலாக்க அயலாக்க (BPO) நிறுவனத்தில் சேர்ந்து ஆறுமாதம் பணிபுரிந்தேன். பின்னர் விதியின் வசத்தால் எனது அண்ணன் ஒருவரின் பரிந்துரையின் பேரில் சென்னை சென்று அவரது நண்பர் பணிபுரியும் நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு ஒன்றையாண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர் பெங்களூரில் எனது பழைய நிறுவனத் தலைவரின் அழைப்பின் பேரில், பெங்களூர் சென்று அங்கு பணி புரிந்தேன். அங்கு கூடுலுகேட், சிக்கல்சந்திரா, கோனப்பன அஹரா (மின்னணு நகர்) மற்றும் சிக்பேட்டை ஆகிய இடங்களில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.

மீண்டும் விதி விரட்டியதால் இரண்டாடுகள் கழித்து சென்னை சென்றேன். அங்கு நண்பர்களுடன் போருரில் தங்கியிருந்து ஒரு வலைஉலக நிறுவனத்தில் உள்ளூர்மயமாக்கல் பிரிவில் சேர்ந்தேன். அப்போது தியாகராயநகரில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் போக்குவரத்திற்கு இலகுவாகும் என்ற நோக்கில் இடம்பெயர்ந்தேன்.

பின்னர் மின்னஞ்சல் வாயிலாக நிறுவன மாற்றத்திற்கான வாய்ப்பு வந்தது. இம்முறை தனியே இடம்பெயராமல் நண்பனையும் அழைத்து வந்து, அவனது உதவியுடன் பெங்களூரில் உள்ள ஒரு மொழிமாற்று நிறுவனத்தில் பணியமர்ந்தேன். அங்கும் ஜெயா நகரில் அருகிலுள்ள திலக் நகரில் அமைந்துள்ள பள்ளித் தோழன் தங்கிய ஆண்கள் விடுதியில் தங்கினேன். பின்னர் நான் வீட்டின் எதிர்ப்பையும் மீறி உமாவைத் திருமணம் செய்து, தற்போது சிக்கல்சந்திராவில் உள்ளேன்.



இவ்வாறு எனது வாழ்க்கைப் பயணம் (நாடோடிப் பயணம்) தொடர்ந்து நிலையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது...........

No comments:

Post a Comment